Tuesday, September 7, 2021

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் #வசைச்சொல்.

 #தமிழர்_தெய்வம் #மூதேவிவழிபாடு

      

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். இப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் #பிரதானதெய்வம் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். மூதேவி தான் #செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு '#கந்தழி' என்று பெயர். இவை அனைத்தையும் விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு.


       பழையோள், காடுகிழாள், கானமாசெல்வி என்று சங்க இலக்கியங்கள் ஏற்றிப் போற்றும் #கொற்றவை, மிகப் பழைமையான தமிழர் பெண்தெய்வமாக இனங்காணப்பட்டவள். கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "#தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள்.சைவ - வைணவப் புராணங்களில், மூதேவியானவள், பாற்கடலைக் கடைந்தபோது திருமகளுக்கு முதலில் தோன்றியவளாக வருணிக்கப்படுகிறாள். முதலில் தோன்றிய தேவி என்பதால் அவள் 'மூதேவி' என்று ஆனாள். நம் முது தந்தையரை எப்படி 'மூதாதையர்' என்று அழைக்கிறோமோ அப்படித்தான் #மூத்ததேவிக்கு 'மூதேவி' என்ற பெயர் வந்தது.தரித்திரத்தின் தெய்வம் எனப் போற்றப்பட்ட தவ்வையை அக்காலத் தமிழர் செல்வத்துக்காகவும் வளத்துக்காகவுமே வழிபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரிய செய்தி. தமிழகத்தின் பெரும்பாக்கம், தென்சிறுவலூர், பேரங்கியூர் முதலான ஊர்களில் கிடைத்த கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பங்களில், அவள் தன் மகன் குளிகனுடனும், மகள் மாந்தியுடனும் கையில் பணப்பேழையுடனும் காட்சியளிக்கிறாள்.தவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம். மேலும் தமிழர் தெய்வமான மூதேவி மழைக் கடவுளான வருண பகவானின் மனைவியாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. உரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன.பல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது.பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து 'தவ்வை'யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், #உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர். #சோழர்காலம் வரை தமிழகத்தில் தவ்வை வழிபாடு சிறப்புற விளங்கியிருக்கிறது என்பதற்கு பல #தொல்லியல்சான்றுகள் கிடைத்துள்ளன. பல்லவர் காலத்தெழுந்த காஞ்சி கைலாசநாதர் கோயிலில் தவ்வைக்கு ஒரு திருமுன் (சன்னதி) உண்டு. திருப்பரங்குன்றத்தில் பாண்டியன் #பராந்தகநெடுஞ்சடையனின் படைத்தளபதி மனைவியான நக்கன் கொற்றியால் தவ்வைக்கு ஒரு குடைவரைக்கோயில் உருவாக்கப் பட்டுள்ளது.